இயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி

0
3137


வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை உரம் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இயற்கை உரம் என்பது விவசாயக் கழிவுகளான உமி, கிளை, இலைதழை, புல், கொட்டை, பழம் ஆகியவற்றிலிருந்தும், சமையலறைக் கழிவுகளான வீடு, உணவகம் மற்றும் சந்தையிலிருந்து கிடைப்பவற்றிலிருந்தும், தோல், விதை, தண்டு, பழம், காய்கறி, சக்கை போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

வீட்டில் இயற்கை உரம் தயாரித்தல்

ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது தொட்டி (மண், சிமிண்ட், பிளாஸ்டிக்) எடுத்துக் கொள்ளவும். அதன் அடியில் சிறு துவாரங்கள் இட வேண்டும். துவாரமானது காற்றோட்டத்திற்கும் அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதற்கும் உதவும்.

பின் அதில் ஒரு இஞ்ச் உயரத்திற்கு சிறு சிறு கற்களை பரப்பவும். அதன் மீது ஒரு இஞ்ச் உயரத்திற்கு மணலைப் பரப்பவும். அதன் மீது ஒரு இன்ச் உயரத்திற்கு அந்தப் பகுதியில் கிடைக்கும் மண்ணைப் பரப்பவும்.

அதன் மீது தினமும் சேரும் சமையலறைக் கழிவுகள், காய்ந்த இலை சருகுகள், கிழிந்த தாள்கள் (தாள்களை தண்ணீரில் நனைத்து தொட்டியில் போடவும்) ஆகியவற்றைச் சேர்க்கவும். ஆரம்பத்தில் அசைவக் கழிவுகளைத் தவிர்க்கவும்.

அவற்றில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஈரப்பதம் அதிகம் இருந்தால் கழிவோடு சற்று மண்ணைச் சேர்க்கவும். தொட்டி நிறையும் வரை கழிவுகளைச் சேர்த்து வரவும்.தொட்டி நிறைந்தவுடன் தொட்டியை மூடிவிடவும். மூடியின் மீது சிறு துவாரம் இடவும்.

வாரம் ஒருமுறை கழிவுகளை கிளறி விடவும். கழிவுகள் மட்குவதற்கு 30 நாட்களிலிருந்து 60 நாட்கள் வரை ஆகும். நன்கு மக்கிய கழிவுகளிலிருந்து மண்வாசனை வரும். இயற்கை உரம் தயார். இது கருமையான நிறத்தில் இருக்கும்

மண்புழு உரம் தயாரித்தல்

விவசாயக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள் அல்லது விவசாய தொழிற்துறைக் கழிவுகளை மக்க வைக்கவும். அல்லது மேற்கூறிய முறையில் வீட்டில் எருவைத் தயாரித்து ( கழிவுகள் நன்கு மக்கியபிறகு) அவற்றில் மண் புழுக்களை விடவும்.

மண்புழு கிடைக்காத பட்சத்தில் சிறிது மண்புழு உரத்தை மக்கிய கழிவுகளில் கலக்கவும். இவ்வாறு செய்தால் மண் புழுக்கள் தானாக உருவாகும். 60 நாட்களுக்கு பிறகு கருமை நிறம் கொண்ட மண்வாசனை கமழும். மண்புழு உரம் தயார்.

மண் புழு உரத்தில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே ஈர சணல் சாக்கு கொண்டு மூடி வைக்க வேண்டும். சாக்கின் மீது அவ்வப்போது நீர் தெளிக்க வேண்டும். மண் புழு உரத்தை வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.

தோட்டத்தில் எரு தயாரித்தல்

முதலில் எரு தயாரிக்க மூட்டத்தின் அடிப்பகுதியில் சிறு கம்பு மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தவும். இது காற்றோட்டத்திற்கு உதவும். இதன் மீது புல், இலை தழைகள் சருகுகள், பழக்காய்கறிக் கழிவுகள் முட்டை மற்றும் விரைவில் மக்கிப் போகும் பொருட்களைப் பயன்படுத்தவும்.

பெரியனவாக இருக்கும் பொருட்களை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். புதிய சாணத்தைக் கரைத்து மூட்டத்தின் மீது தெளிக்கவும். மூட்டத்தின் உயரம் 3 அடிக்குக் குறையாமலும் 5 அடிக்கு மேற்போகாமலும் இருக்க வேண்டும்.

மூட்டத்தின் ஈரத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள அதனைப் பிளாஸ்டிக்கால் மூடவும். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த மூட்டத்தில் தண்ணீர் தெளிக்கவும். மூட்டத்தை 10 நாட்களுக்கு ஒரு முறை கிளறி விடவும். 45லிருந்து 60 நாட்களுக்குப் பிறகு இயற்கையான எரு தயாராக இருக்கும். தயார் நிலையிலுள்ள எருவில் மண்வாசனை வரும்.

பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரம் எனப்படுவது தக்கை பூண்டு, சணப்பை, மணிலா, அகத்தி, கொளுஞ்சி, நரிப்பயிறு ஆகியவற்றை உரமாக இடுவது ஆகும். எல்லா மரத்தின் இலைகளையும் (ஆனால் புளி மரத்து இலை, வேலி இலை நீங்கலாக) உரமாக இடுவது பசுந்தழை உரம் ஆகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here