இளம்பெண்ணின் கொடூர கொலைக்கான காரணம் வெளியானது.!

0
240

கடந்த 30ம் திகதி, புதுவையையொட்டி விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் – பொம்மையார்பாளையம் ரோட்டில் ஒரு முந்திரிக்காடு அருகே அரை குறையாக தீயில் எரிந்த நிலையில் ஒரு இளம் பெண் பிணமாக கிடந்தார்.

அது பற்றி தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

பெண்ணின் முகம் முழுவதும் எரிந்த நிலையில் இருந்ததால் அவர் யார்? என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.

இந் நிலையில் நேற்று காலை ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு வந்த அப்பாதுரை என்ற வாலிபர்,  தனது அக்காள் லட்சுமியை கடந்த 2 நாட்களாக காணவில்லை.

முந்திரிக்காடு அருகே ஒரு பெண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது பற்றி தெரியவந்ததால் அது தன்னுடைய அக்காளாக இருக்குமோ? என்று சந்தேகத்தில் விசாரிக்க வந்து இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதன்பின் அப்பாதுரை, அவருடைய தாயார் மற்றும் 2 சகோதரிகளை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அந்த பெண்ணின் உடலை பார்த்து அது தனது மகள் லட்சுமிதான் என மனோரஞ்சிதம் அடையாளம் காட்டினார்.

லட்சுமி புதுச்சேரி நேருவீதியில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் வேலை பார்த்து உள்ளார்.

அப்போது புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்த மினிவேன் டிரைவர் அருண்குமார் என்ற அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 29ம் திகதி வழக்கம்போல் பாத்திரக் கடைக்கு வேலைக்கு சென்ற லட்சுமி அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் லட்சுமியை அவரது தாயாரும், சகோதரர்களும் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை இந்த நிலையில்தான் லட்சுமி எரித் துக்கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இதில் துப்பு துலங்கியதை யடுத்து லட்சுமியின் காதலன் அருண் என்ற அருண்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் தனது நண்பருடன் சேர்ந்து லட்சுமியை எரித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த லட்சுமியை, அருண்குமார் சந்தித்து உன்னிடம் பேச வேண்டும் என்று கூறி அழைத்து சென்றார்.

அப்போது கோட்டக்குப்பத்தில் தன்னுடைய நண்பர் அப்துல் ரகீமை போனில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு கூறி அழைத்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது லட்சுமி, நாம் இருவரும் பழகியதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அருண், நான் கடந்த சில நாட்களாக உன்னை சந்திக்கவே இல்லை, எனவே கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என்று கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார்.

இந்த பிரச்சினையில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த அருண் லட்சுமியை அடித்துள்ளார் இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்.

இதைப்பார்த்ததும் பயந்து போன அருணும் அவருடைய நண்பர் அப்துல் ரகீமும் மோட்டார் சைக்கிளின் நடுவில் லட்சுமியை தூக்கி வைத்துக் கொண்டு முந்திரிக்காட்டு பகுதிக்கு சென்றனர்.

அங்கு லட்சுமியை முந்திரிக்காட்டு ஓரமாக போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பிடித்து அவரது உடலில் ஊற்றி தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர், பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் அருணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here