மீண்டும் பனிப்போர் உருவாகும் அபாயம்.! வடகொரியா எச்சரிக்கை

தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பனிப்போர் உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது.

0
72

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இராணுவ படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது, கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான வடகொரியாவின் உறவில் இணக்கமான சூழல் உருவாகி இருந்த நிலையில், இராணுவ கூட்டுப்பயிற்சி விவகாரம் மீண்டும் பிரச்சினைக்கு வித்திட்டுள்ளது.

கூட்டுப்பயிற்சி தொடங்கும் முன்னரே இரு நாடுகளையும் எச்சரிக்கும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்தது. 

அதனை மீறி கூட்டுப்பயிற்சி நடந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரியா, இனி தென்கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது என அறிவித்தது.

இந் நிலையில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பனிப்போர் உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன், 3 நாள் பயணமாக தென்கொரியா வந்துள்ள நிலையில், வடகொரியா இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. 

இது குறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

இராணுவ கூட்டுப்பயிற்சி முடிந்த கையோடு, தென்கொரியா அமெரிக்காவில் இருந்து எப்.35ஏ போர் விமானங்கள் உட்பட இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. 

மேலும் அமெரிக்கா தென்கொரியாவில் ஆயுதப் படைகளை உருவாக்க முயற்சிக்கிறது.

இருநாடுகளின் இராணுவ நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் அமைதியை கட்டியெழுப்புவதற்கான உரையாடலின் இயக்கவியலைக் குறைத்து மோதலுக்கு கட்டாயப்படுத்துகின்றன.

இது கொரிய தீபகற்பத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டு அறிவிப்புகள் மற்றும் இராணுவ ஒப்பந்தத்தை வெளிப்படையாக மறுத்துள்ள மற்றும் கடுமையான ஆத்திரமூட்டும் செயல் ஆகும். 

இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பனிப்போர் உருவாகும்.

அதே சமயம் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் தீர்ப்பதற்கான எங்கள் நிலையில் நாங்கள் மாறாமல் இருக்கிறோம்.

ஆனால் இராணுவ அச்சுறுத்தல்களுடன் பேச்சுவார்த்தையை தொடர எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

அதாவது அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கையை கைவிடா விட்டால் அந்த நாட்டுடனான அணுஆயுத பேச்சுவார்த்தை முறிந்து போகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here