பள்ளி மாணவர்கள் மீது சரமாரி கத்திக்குத்து.! 08 பேர் பலி, சீனாவில் பயங்கரம்

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உள்ள என்சி நகரில் தனியார் தொடக்க பள்ளி உள்ளது. 

0
139

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உள்ள என்சி நகரில் தனியார் தொடக்க பள்ளி உள்ளது. 

விடுமுறைக்கு பிறகு நேற்று இந்த பள்ளி திறக்கப்பட்டது, முதல் நாள் வகுப்பிற்காக மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

மேலும் தங்களது பிள்ளைகளை பள்ளியில் கொண்டு வந்து விட பெற்றோர் குவிந்ததால் பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 

அப்போது உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர் பள்ளி மாணவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது, மாணவர்கள் அனைவரும் பயத்தில் அலறி அடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

மேலும் பெற்றோர் சிலர் தங்களது பிள்ளைகளை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஆனாலும் அந்த மர்ம நபர் சற்றும் ஈவு இரக்கமின்றி மாணவர்களை விரட்டி சென்று கத்தியால் குத்தினார். 

இந்த கொடூர தாக்குதலில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து, இறந்தனர், மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

இதற்கிடையில் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வெறியாட்டத்தில் ஈடுபட்ட நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். 

அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த 2 மாணவர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட 40 வயதான அந்த நபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர் தனது காதலியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து கடந்த மே மாதம் விடுதலையானார் என்பது தெரிந்தது.

எனினும் எதற்காக அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்பது குறித்து தெரியவில்லை. 

இது தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் பள்ளி மாணவர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here